திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த ஓணாங்குட்டை கிராமத்தை சேர்ந்த 45 பேர் கடந்த 8-ஆம் தேதி இரு வேன்களில் கர்நாடகா மாநிலம் தர்மசாலாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா முடிந்து இன்று காலை சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் பகுதியில் உள்ள பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் பஞ்சராகியுள்ளது.
இதனை தொடர்ந்து ஓட்டுநர் வேனை சாலையிலேயே நிறுத்தியுள்ளார். வேனில் பயணம் செய்தவர்களும் சாலையிலேயே நின்று கொண்டிருந்துள்ளனர். அப்போது அதே சாலையில் வேகமாக வந்த லாரி பஞ்சராகி நின்று கொண்டிருந்த வேன் மீது அதிவேகமாக மோதியதை தொடர்ந்து வேன் சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் உட்பட 10 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக வாணியம்பாடி, நாட்றம்பள்ளி மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:எத்தனை பேருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும்.. முதலமைச்சர் வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்!
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து நாட்றம்பள்ளி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், உயிரிழந்தவர்கள் மீரா, தெய்வானை, சேட்டாம்மாள், தேவகி, சாவித்திரி, கலாவதி, கீதாஞ்சலி என்பது தெரியவந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்தில் 7 பெண்கள் உயிரிழந்த செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 1 லட்சம், படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களது குடும்பத்தினருக்கு தலா 2 லட்சமும், படுகாயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரமும் நிவாரணம் அறிவித்துள்ளார். இதையும் படிங்க:மரக்காணம் கடலோரத்தில் கரை ஒதுங்கிய வெளிநாட்டவரின் உடல் - போலீஸ் தீவிர விசாரணை!