திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அடுத்த கருணாநிதி தெருவில் பெரியசாமி மகன் சாமுண்டி என்பவர், கார்த்திகா சூப்பர் மார்க்கெட் என்ற பெயரில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த கலையரசன் (28) என்ற நபர், தினந்தோறும் இந்த கடைக்கு வருவது வழக்கம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று வழக்கம்போல் கடைக்கு வந்து சோப்பு, பேஸ்ட், எண்ணேய் போன்ற பொருட்களை திருடி, தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்துள்ளார். இதனை சிசிடிவி காட்சியின் வாயிலாக உரிமையாளர் சாமுண்டி பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது திருடிவிட்டு அந்த நபர் வெளியே வரும்போது, அவரை கையும் களவுமாகப் பிடித்து உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த பொருட்களை கடையின் உரிமையாளர் கைப்பற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து, கலையரசனின் கைகளை கட்டி வைத்து தர்ம அடி கொடுத்துள்ளார். அதனைக் கண்ட அப்பகுதி வழியாகச் சென்ற பொதுமக்களும், அவருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்.