தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி வேலைவாய்ப்பு முகாம் நடத்தியவர்கள் கைது

அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழு (All India council for technical education) பெயரில் போலியான வேலைவாய்ப்பு முகாம் நடத்தியவர்களைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

போலி வேலைவாய்ப்பு முகாம் நடத்தியவர்கள் கைது
போலி வேலைவாய்ப்பு முகாம் நடத்தியவர்கள் கைது

By

Published : Dec 27, 2021, 11:33 AM IST

திருப்பத்தூர்:அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) புதிதாக உருவாகும் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பணி செய்துவருகிறது. இந்தக் குழு சென்னை உள்பட மொத்தம் ஏழு இடங்களில் உள்ளது.

இக்குழுவின் பெயரை வைத்து திருப்பத்தூரை அடுத்த பாராண்டபள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாகக் கூறி வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தியை எட்டு பேர் கொண்ட குழுவினர் பதிவிட்டுள்ளனர்.

புகார்

இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 160-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டனர். இவ்விஷயத்தை அறிந்துகொண்ட அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழு, சென்னை கிளைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக சென்னை அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழு, மத்திய குற்றப் புலனாய்வுத் துறை, வேலைவாய்ப்பு மோசடித் தடுப்புப் பிரிவுக்குப் புகார் அளித்துள்ளனர்.

விசாரணை

இதன் அடிப்படையில், எஸ்பி பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையினர், வேலைவாய்ப்பு மோசடித் தடுப்புப் பிரிவினரும் சேர்ந்து பாரண்டபள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்திவந்த திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருண்குமார் (24) ராஜேஷ் (29), சக்கரவர்த்தி (29), சூர்யா (25), தர்மலிங்கம் (32), தயாநிதி (36), யோகனந்தம் (36), பிரபு (32) ஆகிய எட்டு பேரைப் பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அவர்கள் பயன்படுத்திய ஹார்டுடிஸ்கையும் பறிமுதல்செய்துள்ளனர். மேலும் இவர்கள் பின்னணியில் வேறு எவரும் உள்ளனரா? அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் பெயரை வைத்து இதுபோல் முகாம் நடத்தி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:பண மோசடி வழக்கு - எடப்பாடி பழனிசாமி தனி உதவியாளரின் நண்பர் கைது

ABOUT THE AUTHOR

...view details