திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி, காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன் உள்ளிட்ட காவல் துறையினர் நேற்று முன்தினம் (டிசம்பர் 16) இரவு தாமலேரிமுத்தூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்தின்பேரில் சுற்றித்திரிந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறினார். இதனால் உடனே அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் ஆம்பூர் அருகே நியூ தத்தளகம் பகுதியைச் சேர்ந்த அசாருதீன் (31) எனத் தெரியவந்தது. மேலும் இவர் ஜூலை மாதம் 24ஆம் தேதி அதே மாவட்டத்தில் கியூ பிரிவில் பணியாற்றும் காவலர் புனிதாவின் ஏழு சவரன் தங்கத் தாலிச் சங்கிலி திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதேபோல் பாச்சல் பகுதியைச் சேர்ந்த சசிகலா கழுத்தில் அணிந்திருந்த நான்கு சவரன் தங்க நகையைத் திருடியதாகக் கூறினார். இதனையடுத்து ஜோலார்பேட்டை காவல் துறையினர் அசாருதீன் மீது வழக்குப்பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவரிடமிருந்த 11 சவரன் தங்க நகையும் பறிமுதல்செய்யப்பட்டது.
இதையும் படிங்க:தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த இருவர் கைது