திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட மண்டலவாடி ஊராட்சி கவுண்டப்பனூர் கிராமப் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு இரண்டு மாதங்களாக தண்ணீர் சரியாக வழங்கப்படவில்லை. இதனால் ஒரு கிலோ மீட்டர் கடந்து சென்று தண்ணீர் எடுத்துவரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கவுண்டப்பனூர் பகுதியில் சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மூலம் அப்பகுதிக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதி ஊராட்சி செயலாளர் செல்வகுமார், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து அப்பகுதிக்கு குடிநீர் பைப் போடுவதற்கான பணி செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.
ஏற்கனவே இருந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியிலிருந்து அப்பகுதிக்கு குடிநீர் முறையாக வந்து கொண்டிருந்த பைப்பிற்கு பதிலாக வேறொரு பைப் போடுவதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் ஆங்காங்கே குழி தோண்டியபோது, ஏற்கனவே செயல்பாட்டில் இருந்துள்ள பைப்புகள் சேதமடைந்தன. இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் அப்பகுதி குடிநீர் பைப்புகளை சரிசெய்யும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.