இளைஞரை தாக்கிய திமுக பிரமுகரை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியல் திருப்பத்தூர்:வாணியம்பாடி பாரத்நகர் பகுதியைச் சேர்ந்தவர், ரஃபீக் (18). இவர் தனது நண்பர் தப்ரேஸ் உடன் தனது இரு சக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி செல்லும் தனது மாமா முன்னா என்பவரை அழைத்துச் சென்று, நியூடவுன் பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், அவ்வழியாக நடந்து சென்று கொண்டிருந்த மண்டலவாடி பகுதியைச் சேர்ந்த ஜெய்கிருஷ்ணன் என்பவர் மீது ரபிக் அஹமதின் இருசக்கர வாகனம் உரசியதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த திமுக ஓட்டுநர் அணி மாவட்ட அமைப்பாளர் அருப்புராஜா, இளைஞர்களை தட்டிக் கேட்டபோது, இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதில் ஆத்திரமடைந்த திமுக பிரமுகர் அருப்புராஜா, அவரது ஆதரவாளர்கள் சிலரை அங்கு வரவழைத்து, இளைஞரை கடத்திச் சென்று, மறைமுகமான இடத்தில் கத்தி உள்ளிட்டவைகளை கொண்டு தாக்கியதாகவும் கூறுகின்றனர்.
தற்போது படுகாயமடைந்த இளைஞரை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், இளைஞரைத் தாக்கிய திமுக பிரமுகர் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை கைது செய்யக் கோரி, நியூ டவுன் சென்னை - பெங்களூர் செல்லும் சர்வீஸ் சாலையில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தகவலறிந்து வந்த வாணியம்பாடி நகர போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது, திமுக பிரமுகர் அருப்பு ராஜா உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களைக் கைது செய்ய வலியுறுத்தியுள்ளனர். பின்னர், காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வோம் என மிரட்டியதாகவும், அதில் ஆத்திரமடைந்த ரபீக் அகமதின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
சுமார் அரை மணி நேரத்துக்குப் பின்னர் போலீசார் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வானக ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் இந்த போராட்டத்தின்போது, இஸ்லாமியப் பெண்கள் திமுக ஆட்சி என்றாலே அராஜக ஆட்சி என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தாய்லாந்து பல்கலை மேற்படிப்புக்கு இரண்டு அரசுப் பள்ளி மாணவிகள் தேர்வு - அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்!