திருப்பத்தூர்: கந்திலி ஒன்றியத்திற்குள்பட்ட குரும்பேரி பஞ்சாயத்து பெரிய ஏரியின் பக்கத்தில் உள்ள தரைப்பாலம் உடைந்து ஓட்டையாகும் அளவிற்கு ஏரியில் நீர் நிரம்பி உபரியாக வெளியேறிவருகிறது.
அந்தத் தரைப்பால ஓட்டையில், பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் தவறி விழக்கூடிய ஆபத்தான நிலை உள்ளது. இந்நிலையில், விஷமங்கலம் ஊர் பொதுமக்கள், "பெரிய ஏரியில் உபரியாக வெளியேறும் நீர் பாம்பாற்றில் கலந்து சாத்தனூர் அணை வழியாகக் கடலுக்குச் சென்று வீணாகக் கலந்துவிடுகிறது.
அந்த உபரி நீரை மதகு அமைத்து, தங்கள் பகுதியிலுள்ள ஏரிகளுக்கு ஏற்கனவே உள்ள கால்வாய்களைத் தூர்வாரி திசை திருப்பிவிட்டால், விஷமங்கலம் பஞ்சாயத்து பகுதிகளிலுள்ள கமக்கேரி, நாகுட்டை ஏரி, தசபந்தன ஏரி உள்ளிட்ட எட்டு ஏரிகள் நிரம்பி விஷமங்கலம் பகுதியைச் சுற்றியுள்ள ரங்கநாத வலசை, விசமங்கலம், கோடியூர், சித்தேரி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் உழவரின் சுமார் 300 ஏக்கருக்குத் தேவையான நீர்ப்பாசன வசதி கிடைக்கும்" என்று கூறி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கைவிடுத்திருந்தனர்.