திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் மெத்தனமாக செயல்படுகிறார்கள் எனக் கூறி விரக்தி அடைந்த ஒருவர், தனது குடும்பத்துடன் மருத்துவமனையை விட்டு வெளியேறிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வட்டார மருத்துவமனையாக இருந்த திருப்பத்தூர் அரசு மருத்துவமனையை தமிழ்நாடு அரசு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி பல கோடி ரூபாய்களை செலவு செய்து பல அடுக்கு மாடிகளாக மருத்துவமனை மாற்றப்பட்டது.
இந்த நிலையில், போதுமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லை எனவும், சிகிச்சை சரியாக இல்லை என்றும் கூறி விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக வந்த ஒருவர், தனது மனைவி மற்றும் குழந்தைகள் உடன் குடும்பமாக வெளியேறிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
திருப்பத்தூர் அடுத்த ஆதிசக்தி நகரைச் சேர்ந்தவர் சுஷ்மிதா. சிங்காரப்பேட்டை அடுத்த குப்பநத்தத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், சுஷ்மிதாவின் தந்தை அன்பழகனுக்கு கண் அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில், அவரைப் பார்ப்பதற்காக திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் காளியம்மன் கோயில் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மனைவி மற்றும் குழந்தைகள் உடன் வந்து கொண்டிருந்த கலைச்செல்வனுக்கு விபத்து ஏற்பட்டு உள்ளது.