கள்ளக்குறிச்சி : கரோனா வார்டில் சிகிச்சைப் பெற்று வந்து உயிரிழந்தவரின் உடலை வேறு ஒரு நோயாளியின் வீட்டில் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாலன் என்பவர், கரோனா தொற்று ஏற்பட்டு கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையின் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (செப்.29) இரவு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மருத்துவமனை ஊழியர்கள் இறந்தவரின் உடலுக்கு கவச உடை அணிவித்து தயார் செய்வதற்காக ஸ்ட்ரச்சரில் எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது அருகிலிருந்த படுக்கையில் சிகிச்சைப் பெற்று வந்த தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த நோயாளி ஒருவர், இறந்தவரின் படுக்கையில் தனது மருத்துவக் குறிப்பு அட்டையை வைத்துவிட்டு கழிப்பறைக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், அந்த மருத்துவக் குறிப்பு அட்டையை எடுத்துக் கொண்ட ஊழியர்கள், தொட்டியத்தைச் சேர்ந்த நோயாளியின் முகவரியை அவசர ஊர்தி ஊழியர்களிடம் வழங்கியுள்ளனர். தொடர்ந்து, உயிரிழந்த பாலனுக்கு அடுத்த படுக்கையில் சிகிச்சைப் பெற்று வந்த, தொட்டியத்தை சேர்ந்த கொளஞ்சி என்ற நோயாளியின் வீட்டிற்கு பாலனின் உடலைக் கொண்டு சென்று இறக்கி வைத்துவிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், கொளஞ்சி இறந்து விட்டதாக நினைத்து அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் சோகத்தில் மூழ்கியிருந்த நிலையில், அதிகாலை வேளையில், கொளஞ்சி, தனது குடும்பத்தினருக்கு கைப்பேசியில் தொடர்பு கொண்டு தனது உடல் நிலை குறித்து கூறி, உணவு எடுத்து வருமாறு பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், சடலத்தின் முகத்தை மூடியிருந்த உறையைப் பிரித்து பார்த்தபோது, அங்கு வேறு ஒருவரின் உடல் இருப்பதைக் கண்டறிந்தனர்.
இதனிடையே, உயிருடன் இருப்பவர் இறந்ததாகக் கூறி, முகவரி மாற்றி உடலை அனுப்பிய மருத்துவமனை ஊழியர்கள், அவசர அவசரமாக அங்கு வந்து பாலனின் உடலைப் கைப்பற்றி எடுத்துச் சென்று, அவரது சொந்த ஊரான திருக்கோவிலூருக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.