தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்களுக்கு கரோனா அறிகுறி இருப்பதாக அரசு தெரிவித்ததையடுத்து, அவர்களில் ஏழு பேர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதனிடையே, வாணியம்பாடி அடுத்துள்ள ஜாப்ராபத் பகுதியிலுள்ள ஒருவர் டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பியுள்ளார். இதைத்தொடந்து அவரை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவின் பேரில், காவல் துறை, சுகாதாரத் துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு அந்த நபரை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதைக்கண்டு அச்சமடைந்த அப்பகுதி இளைஞர்கள், புதியவர்கள் அல்லது வெளி நாடு, வெளி மாநிலங்களுக்குச் சென்று திரும்பியவர்கள் ஊருக்குள் வரக்கூடாது என்று தடுப்புகள் அமைத்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் வேப்பிலை, மஞ்சள் கலந்த நீரை ஊர் முழுவதும் தெளித்து வருகின்றனர்.
வெளி நபர்கள் உள்ளே வர அனுமதி இல்லை அதேபோல் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள இளைஞர்கள் தங்கள் ஊருக்குள் செல்பவர்கள் கைகளை சுத்தமாகக் கழுவி உள்ளே செல்ல வேண்டும் என்று எழுதியும், தெருவின் நுழைவாயில்களில் வேப்பிலைகளை கட்டியும் கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தருமபுரியில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி - அமைச்சர் கே.பி. அன்பழகன்