கருவில் இருக்கும் குழந்தை குறித்து ஸ்கேன் செய்து கூறும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கைது திருப்பத்தூர்: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு காவேரிப்பட்டணம் கிராமத்தில் ஒரு கும்பல் சட்டத்துக்கு புறம்பாக கரு கலைப்பு மற்றும் கருவில் இருப்பது ஆணா பெண்ணா என கண்டறிந்து கூறுவதாக ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.
நரிமேடு பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது மூன்றாவதாக கருத்தரித்து மூன்று மாதங்கள் ஆகியுள்ளன. வேடியப்பன் என்ற இடைத்தரகர் மூலம் சுகுமாரன் ஸ்கேன் செய்து காயத்ரிக்கு பெண் குழந்தை இருப்பதாக கூறியதாக சொல்லப்படுகிறது.
ஸ்கேனில் பெண் குழந்தை இருப்பதாக கூறியதன் காரணமாக காவேரிப்பட்டணம் கொசமேடு கிராமத்தைச் சேர்ந்த உமாராணி என்பவர் மூலம் மாத்திரைகள் மற்றும் உபகரணங்கள் மூலம் காயத்ரி கருக்கலைப்பு செய்ததாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த கிருஷ்ணகிரி சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மற்றும் அதிகாரிகள், உமாராணி வீட்டிற்கு சென்று கருக்கலைப்பு செய்ததற்கான அனைத்து ஆதாரங்களையும் கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கருவில் இருக்கும் குழந்தை குறித்து ஸ்கேன் செய்து கூறும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கைது; 2 பேர் தப்பியோட்டம் மேலும் அவரது வீட்டின் அருகே சந்தேகத்தின் பேரில் நின்று இருந்த மூன்று நபர்களை விசாரித்த போது தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்காக காத்திருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் கூறிய தகவலின் அடிப்படையிலும், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரிலும், திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் ரமேஷ் மற்றும் காவல்துறையினர் ஒன்றிணைந்து சித்தரிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணி பெண்ணுடன் கள ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்து உள்ளனர்.
அப்போது அந்தப் பகுதியில் ஒரு வீட்டை வேடியப்பன் வாடகைக்கு எடுத்து, அதில் சட்டத்திற்கு புறம்பாக கருவில் இருப்பது ஆணா பெண்ணா என கண்டறிந்து கூறி வந்தது தெரிய வந்ததாக கூறப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் வருவதை கண்டு வேடியப்பன் மற்றும் சுகுமார் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
அதேநேரம் வேடியப்பனுக்கு உதவியாக இருந்த சங்கர் என்பவரை கைது செய்ததாக போலீசார் கூறினர். மேலும் அந்த வீட்டில் ஐந்து கர்ப்பிணி பெண்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 29 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை காவல் துறையினர் கைப்பற்றினர். மேலும் ஆன்லைன் மூலம் 18 ஆயிரத்து 500 ரூபாய் பணம் வேடியப்பனுக்கு அனுப்பப்பட்டது கண்டறியப்பட்டதாக போலீசார் கூறினர். தப்பியோடிய வேடியப்பன் மற்றும் சுகுமார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:நிலத்தை அளவீடு செய்ய காலதாமதம்.. வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா!