திருப்பத்தூரில் பன்றிக்காய்ச்சல் பரவும் அபாயம் திருப்பத்தூர்:வாணியம்பாடியில் பன்றிக் காய்ச்சலால் ரவிக்குமார் என்பவர் நேற்று உயிரிழந்த நிலையில், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார் ரவிக்குமார்(வயது 59). இந்நிலையில் சமீப நாட்களுக்கு முன்பு ரவிக்குமாருக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ளது. காய்ச்சலால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளார். மருத்துவமனைக்குச் சென்று பார்த்த போது பன்றிக்காய்ச்சல் என கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ரவிக்குமார் மேல் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்த ரவிக்குமார் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதையும் படிங்க:அரசு விழாவில் பெண் தற்கொலை முயற்சி.. கந்துவட்டி கொடுமையா காரணம்?
அதனைத் தொடர்ந்து அவருடைய உடலைச் சொந்த ஊரான வாணியம்பாடி நியூ டவுனுக்கு கொண்டு செல்லப்பட்டு மயானத்தில் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு 10 அடி ஆழம் நிறைந்த பள்ளம் தோண்டப்பட்டு, சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் பாதுகாப்பு உடை அணிந்து ரவிக்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் பன்றிக்காய்ச்சல் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இன்று (செப்.04) ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இந்த விழிப்புணர்வு முகாமில், அப்பகுதி பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ ஆலோசனைகள் மற்றும் நோய்த் தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் தலைமையில், நகராட்சி ஊழியர்கள் அப்பகுதியைத் தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அப்பகுதி முழுவதும் நகராட்சி ஊழியர்களால் தெரு எங்கும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து மருத்துவ முகாம் நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் வேலூர் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் தனலட்சுமி மற்றும் திருப்பத்தூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க:திருப்பத்தூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்! போலீசார் விசாரணை!