அரசு விழாவில் கடமையை தவறிய அதிகாரிகள்... சாப்பாட்டுக்கு தள்ளு முள்ளு... திருப்பத்தூர்:ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியிலுள்ள தனியார் திருமண வளாகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. கடன் வழங்கும் விழா நடைபெற்று முடிந்த பிறகு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், துறை சார்ந்த அதிகாரிகள் கடமையைச் சரியாக செய்ய தவறியதால் உணவு வாங்குவதற்காகக் கூட்டம் கூட்டமாகப் பெண்கள் தள்ளு முள்ளில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி உணவு தட்டு வழங்கும் நபர் பின்னாடியே ஓடுவதும் கெஞ்சுவதுமாக அலைந்த பெண்களில் ஒரு சில பேர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
மேலும், சுய உதவிக் குழுவில் உள்ள பெண்கள் உடன் வந்திருந்த குழந்தைகளுக்குக் கூட உணவு உண்பதற்குத் தட்டு கிடைக்காததால் ஒரு சில பெண்கள் உணவு வேண்டாம் என்று கிடைத்த தட்டை மீண்டும் திருப்பி கொடுத்துவிட்டுச் சென்ற நிலையும் ஏற்பட்டது.
உலகம் முழுவதும் கரோனா தொற்றின் பீதி சற்று தணிந்திருந்த நிலையில் மீண்டும் கரோனா தொற்றின் தாக்கம் பரவக்கூடும் என்றும் அதற்கான கட்டுப்பாடுகள் குறித்தும் சுகாதாரத்துறை தீவிரமாக யோசித்து வருவதாகச் செய்திகள் கசிந்து வருகிறது. இந்நேரத்தில் நிகழ்ச்சியில் துறை சார்ந்த அதிகாரிகளின் அலட்சியத்தால் எந்தவித சமூக இடைவெளியும் இல்லாமல் முகக்கவசமும் இல்லாமல் தள்ளு முள்ளில் ஈடுபட்ட சம்பவம் சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:விமானத்தில் விளையாட்டு... செந்தில் பாலாஜி கூறுவது யாரை?