நாயக்கனேரி விவகாரம்: திருபத்தூர் ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை! திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக இந்துமதி என்பவர் அறிவிக்கப்பட்ட நிலையில், அவரை பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என அதே பகுதியைச் சேர்ந்த சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்துமதிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படாமல் உள்ளது. இதனை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி, திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு இயக்கத்தினைச் சார்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று (அக் 6) விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஓம்பிரகாசம், இந்துமதி பாண்டியன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பேசுகையில், “இந்த வழக்கு தொடர்பான சட்ட பிரச்னைகள் தீர்ந்த பிறகே பட்டிலினப் பெண் ஊராட்சி மன்றத் தலைவர் இந்துமதிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும்” என தெரிவித்துள்ளார். மேலும், இந்த பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக கூறினார். இதனால் மீண்டும் இந்துமதி பதவிப்பிரமாணம் தள்ளிப்போகும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். முன்னதாக, இந்த பிரச்னைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்துமதி பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சாதிய வன்கொடுமை நடத்திய நாயக்கனேரி பஞ்சாயத்தைச் சேர்ந்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆம்பூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் விடுதலைக்கழகம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய கட்சிகள் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து பறை அடித்து கண்டன கோஷங்களை எழுப்பி ,ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும், நாயக்கனேரி ஊராட்சி மன்றத்தலைவர் பதவியேற்பு விவகாரம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் துரைமுருகன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியேற்பு குறித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவைக்கூட அறிந்து கொள்ள முயற்சிக்காமல், தமிழ்நாடு அரசின் மீது ஆளுநர் திட்டமிட்டு அவதூறுப் பரப்புரையை செய்து வருவதாக அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தார்.
இதையும் படிங்க:One Day HM: ஒரு நாள் தலைமை ஆசிரியரான பள்ளி மாணவர்.. பொள்ளாச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்!