தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டை இடித்த நகராட்சி நிர்வாகம் - கதறி அழுத பெண்! - புறம்போக்கு இடத்தில் இருந்த வீடு இடிப்பு

ஜோலார்பேட்டை அருகே 70 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு இடத்தில் வசித்து வந்தவர் வீட்டை நகராட்சி நிர்வாகம் இடித்ததால், நடுரோட்டில் அந்த வீட்டில் வசித்து வந்த பெண் அழுத காட்சி நெஞ்சை உருக்கியது.

கதறி அழுத பெண்
கதறி அழுத பெண்

By

Published : Apr 20, 2022, 7:36 PM IST

திருப்பத்தூர்:ஜோலார்பேட்டை அடுத்த சுண்ணாம்பு கல்லைப் பகுதியில் வசித்து வந்தவர், கோபால். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு ஷீலா (40), சுமதி (35) ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

இவர்களும், ஷீலாவின் கணவர் சதீஷ் (43)-ம் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். வனிதா, கோபாலின் மறைவிற்குப்பின் பின்பும் தற்போது வரை, சுமார் 70 ஆண்டுகளாக அதே இடத்தில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியில் வசிக்கும் சிவராஜ் என்பவர் உடற்பயிற்சி நிலையம் அமைக்க, இவர்கள் வசித்து வந்த வீட்டை விலைக்கு கேட்டுள்ளார். ஆனால், இவர்கள் அந்த இடத்தை விற்க மறுத்துவிட்டதால் இவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சிவராஜ், ஷீலா, அவரது கணவர் சதீஷ் மற்றும் சுமதி வசித்துக்கொண்டிருக்கும் வீடு அரசு புறம்போக்கு இடத்தில் உள்ளதாக கூறி நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் ஷீலாவின் வீட்டை அப்புறப்படுத்த இரண்டு முறைகள் முயற்சி செய்துள்ளனர். இதனால், ஷீலா, சுமதி ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர். நீதிமன்றம் அரசுக்கு சாதகமாக வழி காட்டியதால் இன்று (ஏப்.20) நகராட்சி ஆணையாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஜேசிபி கனரக இயந்திரத்தைக் கொண்டு வீட்டை இடிக்க முயன்றனர்.

அப்போது, தாங்கள் காலம் காலமாக வாழ்ந்துவந்த வீட்டை இடிக்க வேண்டாம் எனக் கூறி ஷீலா, சுமதி ஆகியோர் அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். ஆனால், நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படிதான் வீட்டை இடிப்பதாகக் கூறி நகராட்சி ஆணையர் வீட்டை இடிக்க உத்தரவிட்டார்.

வீட்டை இழந்து கதறி அழுத பெண்

உடனடியாக இயந்திரம் வீட்டை இடிக்கத்தொடங்கியது. இதனைக் கண்ட ஷீலா, சுமதி ஆகியோர் நடு வீதியில் அமர்ந்து கதறி அழுதனர். இக்காட்சி அப்பகுதி மக்களின் மனதில் பெரும் உருக்கத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:பொதுத்துறை வங்கியில் ரூ.74 லட்சம் மோசடி... ஆடம்பர வாழ்க்கை வாழ ஊழியர்கள் நூதனம்...

ABOUT THE AUTHOR

...view details