திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் புதிதாக கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அதனை இன்று(ஜூலை 25) பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி. வீரமணி ஆய்வு செய்தார். அப்போது அவருடன் மாவட்ட ஆட்சியர் சிவனருள் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர், மாவட்ட அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் வீரமணி கூறும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் புதிதாக 200 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 29 சிகிச்சை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் பேட்டி தற்போதுவரை 860 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 550 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் 310 பேர் மட்டுமே சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கரோனா தொற்றால் பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தேவையான படுக்கை வசதிகள் உள்பட அனைத்து வசதிகளும் தயார் செய்து வருகிறோம்.
அனைத்து மாவட்டங்களையும் ஒப்பிட்டு பார்த்தால், வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவு. நோயாளிகள் வசிக்கும் பகுதிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகள் மாவட்ட ஆட்சியர்களின் நேரடி கண்காணிப்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன" என்றார்.
இதையும் படிங்க: கால்நடை மருத்துவம் படிக்க மாணவர்கள் ஆர்வம் - அமைச்சர் ராதாகிருஷ்ணன்