திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் தேசிய சித்த மருத்துவ தினம் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி கலந்து கொண்டு சித்த மருத்துவ கண்காட்சியை திறந்து வைத்தார்.
இம்மருத்துவ கண்காட்சியில் வேலூர் ஸ்ரீ புற்று மகரிஷி சமூக சேவை மையம் மற்றும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆயுஷ் சித்த மருத்துவர்கள் கலந்து கொண்டு சித்த மற்றும் ஆயுர்வேதம் யோகா போன்ற தமிழர்களின் பாரம்பரிய மிக்க மருத்துவத்தின் மகத்துவத்தை கண்காட்சியில் விளக்கிக் காட்டினார்கள்.
மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட சித்த மருத்துவ புத்தகங்கள், சிறுதானிய இயற்கை உணவுகளின் பயன்கள் குறித்து பல்வேறு குறிப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இறுதியில் சித்த மருத்துவர்களுக்கு அமைச்சர் கே.சி. வீரமணி கேடயங்கள் வழங்கினார்.
மருத்துவர்களுக்கு கேடயங்கள் வழங்கிய அமைச்சர் மரங்களை நட்டுவைத்த அமைச்சர்:
இதைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டம் லண்டன் மிஷன் சாலையில், புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இடத்தில் பல நூறு வருடங்களாக செழித்திருந்த 137 மரங்களை வீனாகாத வண்ணம் திருப்பத்தூர் நகரின் பல்வேறு இடங்களில் வேரோடு இடம் பெயர்த்து நடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் எதிரில் இரண்டு மரங்களை இடம் பெயர்த்து நட்டபொழுது பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர். கே சி வீரமணி வெப்பாலம் ரகத்தைச் சார்ந்த மரத்திற்கு பத்மஸ்ரீ என பெயர் சூட்டினார்.
ஏற்கனவே அந்த மரம் இருந்த இடத்திலிருந்து எடுத்து வரப்பட்ட தாய்மண்ணை குழியில் போட்டு, மூடினார்.
மரத்தை நடும் அமைச்சர் வீரமணி இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிவன் அருளும் மற்றொரு மரத்தை நட்டு வைத்து, வணங்கினார். இந்நிகழ்வில், அதிமுக பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: முதுமை உருவாக்கிய பசுமை: 40 ஆண்டு உழைப்பு!