திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை, இடையம்பட்டி, குடியானகுப்பம் ஆகிய பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் தமிழ்நாடு அரசு சார்பில் இலவச முகக் கவசங்கள் வழங்கும் திட்டங்களை வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் சுமார் 11 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முகக் கவசங்கள் வழங்கப்படுகிறது. இன்று (ஆக. 12) ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள இரண்டு லட்சத்து 85 ஆயிரத்து 130 குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முகக் கவசங்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டது.
அப்போது பேசிய அமைச்சர், “கரோனா தொற்றின் ஆரம்பக் காலத்தில் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடைவடிக்கைகள் குறித்து உலகமே உற்றுப் பார்க்கும் அளவிற்கு தமிழ்நாடு முதல்வரின் செயல்பாடுகள் இருந்தன.
நடிகர் ரஜினிகாந்த், ஒரு திரைப்படத்தில் வேட்டி அணியாமல் வெளியே செல்வார். அப்போது பொது மக்கள் அனைவரும் ரஜினிகாந்தை பார்த்து சிரிப்பார்கள். இனி எவரும் முகக் கவசங்கள் அணியாமல் வெளியில் சென்றால், அதே போன்று பொது மக்கள் சிரிப்பார்கள். எனவே இனி அனைவரும் முகக் கவசங்களை அணிய வேண்டும்” என்று கூறினார். இவரது இந்தக் கருத்து தற்போது பேசுபொருளாகியுள்ளது.