திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட அண்ணா தெருவில் புதிய நூலகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ள கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
காவிரி கூட்டு குடிநீர் திட்டம்
இவ்விழாவில், அமைச்சர் வீரமணி பேசுகையில், "வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை நிரந்தரமாக போக்க ஆயிரத்து 212 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. திருப்பத்தூர் - அரக்கோணம் வரை காவிரி கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், திருப்பத்தூர் மாவட்ட மக்களின் குடிநீர் பற்றாக்குறை தற்போது தீர்க்கப்பட்டுள்ளது.
மேம்பாலங்களால் போக்குவரத்து தடை இல்லை
திருப்பத்தூர் - அரக்கோணம் வரை ரயில்வே லெவல் கிராஸிங் இல்லாமல் அனைத்து இடங்களிலும் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து தடை ஏதும் இல்லாமல் பொதுமக்கள் எளிதில் விரைவாக சென்று வருகின்றனர்.
இதேபோல், திருப்பத்தூர் - வாணியம்பாடி வரை சாலை மேம்படுத்தும் பணியும் நடைபெறவுள்ளது. மக்களின் தேவைகளை அறிந்து தமிழ்நாடு அரசு இதுபோன்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
பள்ளிகளின் தரம் உயர்வு
திருப்பத்தூர் மாவட்டத்தில், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பல இடங்களில் உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பல கிராமங்களில் மருத்துவமனைகளும் தொடங்கப்பட்டுள்ளது.
கரோனா காலத்தில் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்காக தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கி வருகிறது" எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சிவனருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:'கூட்டணி இல்லாமல் தேர்தலைச் சந்திக்க அதிமுக தயார்' - அமைச்சர் கே.சி. வீரமணி