திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் வாணியம்பாடி திருப்பத்தூர் சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே வாணியம்பாடியில் இருந்து ஊத்தங்கரை வரை சுமார் 45 கிலோ மீட்டர் தூரம் இருவழி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதனை சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில், நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுவதற்கான பூமி பூஜைக்கு தமிழ்நாடு பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே சி வீரமணி இன்று அடிக்கல் நாட்டி, சாலை பணிகளை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், மாவட்ட ஆட்சித் தலைவர் சிவனருள் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் கே சி வீரமணி, 'நீண்ட காலமாக இருந்துவந்தபொது மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு வாணியம்பாடி முதல் ஊத்தங்கரை வரையிலான இருவழி தேசிய நெடுஞ்சாலையை நான்குவழி தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இச்சாலை பணிகள் விரைந்து முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சாலையை வைத்து எதிர்க்கட்சியினர் இதுவரை அரசியல் செய்து கொண்டிருந்தார்கள். இனிமேல் எதை வைத்து அரசியல் செய்ய போகிறார்கள். இந்தச் சாலை, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இரண்டு வழியாக சாலையாக இருந்த பொழுது, அதனை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் பின்னர் மத்திய அரசு இதனை நான்கு வழிச் சாலையாக மாற்றப்படும் என அறிவித்தது. மத்திய அரசின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப, சாலையை செப்பனிட சற்று தாமதம் ஏற்பட்டது. இருவழி சாலையாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இச்சாலை போடப்பட்டிருக்கும்.