திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 2 கோடியே 24 லட்சத்து 21 ஆயிரத்து 150 ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளாராக பங்கேற்ற நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். அதன் பின்னர் விழாவில் பேசிய அவர், “நான் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக பொறுப்பேற்ற உடனே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை ஆய்வு கூட்டத்தை நடத்தி வங்கிகள் எல்லாம் இளைஞர்களுக்கு, பட்டதாரிகளுக்கு, ஏழை விவசாயிகளுக்கு உதவ வேண்டும் ஆணை பிறப்பித்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு விவசாயிகளுக்கு உரிய கடன் கொடுப்பதிலும் நமது மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது.
திருவண்ணாமலை மாவட்ட அமைச்சராகவும், திருப்பத்தூர் மாவட்ட அமைச்சராகவும், நெடுஞ்சாலை துறை அமைச்சராகவும் உள்ளாதால், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று விபத்தை எப்படி குறைப்பது என அனைத்து மாவட்ட ஆட்சியரிடத்திலும் ஆய்வு கூட்டம் நடத்துகின்றேன். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற உடனே மலைவாழ் மக்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏறக்குறைய 11 ஆயிரம் மலைவாழ் மக்களுக்கு எஸ்டி சான்றிதழ்கள் வழங்கியுள்ளார்.