திருப்பத்தூர்:வாணியம்பாடி பைபாஸ் சாலை பகுதியில் கடந்த மாதம் குடோன் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக வாணியம்பாடி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிறு கடைகள், மளிகைக் கடைகளில் குட்கா மற்றும் புகையிலை பொருள்கள் விற்கப்படுகிறதா என காவல்துறையினர், நகராட்சி அலுவலர்கள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் வணிக நேரத்தில் தங்களுக்கு சிரமம் ஏற்படுவதாக அலுவலர்களிடம் வணிகர்கள் வருத்தம் தெரிவித்தனர். இந்த நிலையில் வாணியம்பாடி வர்த்தக சங்கக் கட்டடத்தில் வியாபாரிகள் சங்கக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட காவல் துணை கண்காணிப்பாளர் பழனி செல்வம் தலைமையில் ஒருங்கிணைந்த வணிகர்கள், "இனி தங்கள் பகுதியில் குட்கா பொருள்களை விற்கவோ அல்லது விநியோகம் செய்யவோ மாட்டோம். அப்படி யாரேனும் செய்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும்" எனக் கூறி நேற்று (ஜூலை 27) உறுதிமொழி ஏற்றனர்.
இதையும் படிங்க: சாலை ஆக்கிரமிப்பு: நீதிமன்றம் அறிவுறுத்தல்