ரயிலை நிறுத்திய மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞன் to முடிதிருத்துநர் - ஒரு நம்பிக்கை கதை! திருப்பத்தூர்:கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி வாணியம்பாடி ரயில் நிலையம் அருகில் உள்ள தண்டவாளத்தில் நின்று இளைஞர் ஒருவர் விரைவு ரயிலை நிறுத்தினார். இதனைத் தொடர்ந்து அங்கு தண்டவாளம் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே ஊழியர்கள் அந்த இளைஞரை மீட்டு அவரை ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனைத்தொடர்ந்து ரயில்வே காவல்துறையினர் அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், அந்நபர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் வாணியம்பாடியில் உள்ள சரணாலயம் என்னும் கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் சரணாலயம் கருணை இல்ல இயக்குநர் டேவிட் சுபாஷ் என்பவரின் மேற்பார்வையில் ஒரு மாத காலமாக மனநல மருத்துவர்கள் வடமாநில இளைஞருக்கு உரிய சிகிச்சை அளித்தனர். தொடர் சிகிச்சையில் இருந்த வடமாநில இளைஞர் தற்போது மனநலப்பாதிப்பில் இருந்து முற்றிலும் குணமாகியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அவரிடம் மனநலகாப்பக இயக்குநர் டேவிட் சுபாஷ் விசாரணை மேற்கொண்டபோது அவர் பெயர் சிவதாஸ் பண்டாரி என்பதும், அவர் ஜார்க்கண்ட் மாநிலம், தான்பாத் அடுத்த சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், அவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை இருப்பதும், அவரது கிராமத்தில் அவர் முடிதிருத்தும் பணி செய்து வந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் முழுவதுமாக மனநலம் தேறிய சிவதாஸ் பண்டாரி கருணை இல்லத்தில் உள்ள நபர்களுக்கு முடி திருத்தும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் சிவதாஸ் பண்டாரியைச் சொந்த கிராமத்திற்கு அனுப்ப மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கருணை இல்ல இயக்குநர் டேவிட் சுபாஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த வருடம் மனநலம் பாதிக்கப்பட்டு தண்டவாளத்தில் நின்று ரயிலை நிறுத்திய நபர் தற்போது குணமாகி முடிதிருத்தும் பணி செய்யும் நிகழ்வு வாணியம்பாடி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இறந்தும் 4 பேர் கண்களில் வாழும் பொள்ளாச்சி இளம் மருத்துவர்!