திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மண்டி தெரு பகுதியில் மருத்துவமனை நடத்தி வருபவர் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் இக்ராமுல்லா. இவருடைய மருத்துவமனை வளாகத்தில், அவரது தங்கை மகன் அல்தாப் என்பவர் கடந்த 17 ஆண்டுகளாக மருந்தகம் நடத்தி வருகிறார். தற்போது, கரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் மருத்துவமனை சரிவர இயங்கவில்லை.
இதனால், அல்தாப் கடந்த மூன்று மாதங்களாக கடை இயங்காத நேரத்திலும் வாடகை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் மருத்துவமனை இயங்க அரசு தளர்வு அளித்தது. இதனைத்தொடர்ந்து, மருத்துவமனை திறக்கப்பட்டு தற்போது இயங்கி வரும் நிலையில், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தேவைப்படும் ஊசிகள் மருந்துகள் உள்ளிட்டவற்றை மருத்துவரே வழங்கியதாக தெரிகிறது.
இதனால், ஆத்திரமடைந்த மருந்து கடை உரிமையாளர் அல்தாப் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மருத்துவராக நீங்கள் ஊசி மற்றும் மருந்து ஸ்டாக் வைத்தால் தனக்கு மருந்து விற்பனை பாதிக்கப்படுகின்றது. உடனடியாக கடையின் அட்வான்ஸ் மற்றும் கடனாக பெற்ற 1 லட்சம், தனக்கு தரவேண்டிய ஆறு லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டால் கடையை காலி செய்வதாக கூறியுள்ளார்.