ஆம்பூரில் அன்னதானம் எனக்கூறி அரிசி மூட்டைகளை அபேஸ் செய்த நபர் - சிசிடிவி காட்சிகள் வெளியீடு! திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஜார் ரோடு, சுண்ணாம்புக்காரத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் பாரி (45). இவர் அதே பகுதியில் அரிசி கடை நடத்தி வந்துள்ளார். திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களுக்கும் ஆன்லைன் மூலமாகவும் அரிசி மூட்டைகளை விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி இவருடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட நபர் ஒருவர், ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் உள்ள அரசமர முத்துமாரியம்மன் கோயிலுக்கு அன்னதானம் செய்வதற்காக பத்து மூட்டை அரிசி உடனடியாக வேண்டும் எனவும், அதற்கான தொகையை நேரில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அப்துல் பாரி அவர் கேட்டபடி ஆறு மூட்டைகளை கொண்டு வந்து கொடுத்துள்ளார்.
அப்போது அந்த நபர் மேலும் ஆறு மூட்டைகள் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதையடுத்து அப்துல் பாரி அரிசி மூட்டைகளை எடுத்து வருவதற்காக சென்றுள்ளார். அப்துல் பாரி திரும்பி வந்து பார்த்தபோது, அந்த நபர் ஆறு அரிசி மூட்டைகளையும் ஆட்டோவில் எடுத்துக் கொண்டு தப்பியோடியது தெரியவந்தது. பின்னர் அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது, மேலும் பல இடங்களுக்கு வந்தால் பணம் தருவதாகக் கூறி அலைக்கழித்துள்ளார். பிறகு செல்னை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார்.
இதனால் செய்வது அறியாமல் திகைத்த அரிசி வியாபாரி அப்துல் பாரி, ஆம்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அரிசி வியாபாரி அப்துல் பாரி, "கடந்த 3ஆம் தேதி எனக்கு செல்போனில் தொடர்பு கொண்ட நபர், கோயிலுக்கு தர்மம் செய்ய வேண்டும், வேண்டுதல் என்று கூறி அரிசி மூட்டைகளை கேட்டார். அதை நம்பி நான் எனது இருசக்கர வாகனத்தில் ஆறு மூட்டை அரிசியை கொண்டு வந்து கொடுத்தேன். மீண்டும் ஆறு மூட்டைகளை அவர் கேட்டதால், அதனை எடுக்கச் சென்றேன். அப்போது, அவர் நான் ஏற்கனவே கொடுத்த அரிசி மூட்டைகளை திருடிச் சென்றுவிட்டார். அந்த அரிசி மூட்டைகளின் மதிப்பு 7,800 ரூபாய். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்திருக்கிறேன். என்னைப் போல எந்த வியாபாரிகளும் ஏமாறக்கூடாது, அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்று கூறினார்.
அப்துல் பாரி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், நபர் நடந்து சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. அதனை வைத்து, வியாபாரியிடம் அரிசி மூட்டைகளை கொள்ளையடித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் சுமார் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான தக்காளிகள் திருட்டு - டைமிங் அபேஸ்!