திருப்பத்தூர்:வாணியம்பாடி பெருமாள் பேட்டையில் சக்கரவர்த்தி என்பவர் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடையில் பல்வேறு நிறுவனத்தின் பெயிண்டுகளை விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் இவரிடம் பிரபல ஏசியன் பெயிண்ட் (Asian Paints) வாங்கிய ஒரு சில வாடிக்கையாளர்கள், வாங்கிய பெயிண்டுகள் போலியாக உள்ளதாக ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் கஸ்டமர் கேர் மூலம், டெல்லியில் உள்ள ஏசியன் பெயிண்ட் தலைமை அலுவலகத்துக்கு புகார் அனுப்பியுள்ளனர்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட இடத்தில் இன்வஸ்டிகேஷன் ஏஜென்டாக நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சுந்தரம் தலைமையிலான குழுவினரை வாணியம்பாடிக்கு அனுப்பி விசாரணை செய்ய ஏசியன் பெயிண்ட் நிறுவன தலைமை உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து வாணியம்பாடிக்கு வந்த சுந்தரம் தலைமையிலான புலனாய்வுக் குழுவினர், பெருமாள் பேட்டையில் உள்ள சக்கரவர்த்தியின் கடைக்குச் சென்று வாடிக்கையாளர்களைபோல் பெயிண்டுகளை வாங்கியுள்ளனர்.
தொடர்ந்து அதனை சோதித்துப் பார்த்துள்ளனர். அப்போது அதில் போலி பெயிண்டுகளை ஏசியன் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து புலனாய்வுக் குழு ஏஜென்ட் சுந்தரம், சக்கரவர்த்தியின் மீது வாணியம்பாடி நகர காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.