தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக ஆட்சியில் ஊரக வேலைவாய்ப்பு 300 நாள்களாக அதிகரிக்கப்படும் - துரைமுருகன் - Rural Employment Guarantee Scheme will be increased to 300 days

திருப்பத்தூர் : தமிழ்நாட்டில் திமுக தலைமையில் ஆட்சி அமையும்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் 300 நாள்களாக அதிகரிக்கப்படும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் ஊரக வேலைவாய்ப்பு 300 நாள்களாக அதிகரிக்கப்படும் - துரைமுருகன்
Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme will be increased to 300 days - duraimurugan

By

Published : Dec 24, 2020, 9:08 PM IST

எதிர்வரும் 2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற பெயரில் திமுக தேர்தல் பரப்புரையை கடந்த 20ஆம் தேதியன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இந்த பரப்புரையில் தமிழ்நாடு முழுவதுமுள்ள 16 ஆயிரத்து 500 கிராம சபைகள் - வார்டுகளில் திமுக மாவட்ட, மாநகரச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்., ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் நிர்வாகிகள் என 1704 திமுக நிர்வாகிகள் இணைந்துள்ளனர். அந்த கூட்டங்களில் அதிமுகவுக்கு எதிராக 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற தீர்மானத்தை நிறைவேற்றி வருகின்றனர்.

அந்த வகையில், பரப்புரையின் இரண்டாம் நாளான இன்று (டிச.24) திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுக்காவிற்குட்பட்ட ஆத்தூர் குப்பம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பங்கேற்றார். ஒன்றிய செயலாளர் சூரியகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கிராமசபைக் கூட்டத்தில் 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஊர் பொதுமக்கள் மத்தியில் பேசிய துரைமுருகன், “அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றிப் பெறும். திமுக கூட்டணியானது, வருகின்ற தமிழ்நாடு பொதுத் தேர்தலில் 200 சட்டப்பேரவைத் தொகுதிகளை கைப்பற்றும். சட்டப்பேரவைத் தேர்தலில் ஜோலார்பேட்டையில் திமுக, அதிமுகவுக்கு இடையே கடும் போட்டி நிலவும். இதில், திமுக கட்டாயம் வெற்றிப் பெறும்.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி வரும்போது, தமிழ்நாடு மக்களுக்கு பல எண்ணற்றத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். குறிப்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் வேலைநாள்கள் 300 நாள்களாக அதிகரிக்கப்படும்.

கிராமசபைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஊர் பொதுமக்கள் மத்தியில் பேசிய திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்

விவசாயிகளுக்கு விலையில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தை திமுகதான் கொண்டு வந்தது. புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்” என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தேவராஜ், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்க் செல்வன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா தண்டபாணி உட்பட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க :எம்ஜிஆரின் கடைசி நிமிடங்கள்...!

ABOUT THE AUTHOR

...view details