திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் திவ்யதர்ஷினி. ஓசூர் பகுதியைச் சேர்ந்தவர், ரமேஷ். இவரது மகன் பவன்குமார். திவ்யதர்ஷினியும் பவன் குமாரும் சென்னை அக்னி கல்லூரியில் ஒன்றாகப் படித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (செப் 23) காலை திவ்யதர்ஷினி விண்ணமங்கலம் பகுதியில் உள்ள தனது தோழியின் இல்லத்திற்குச் சென்று வருவதாக கூறி வீட்டைவிட்டு சென்றுள்ளார். ஆனால், திவ்யதர்ஷினி அங்கு செல்லாமல், ஆம்பூர் பகுதியில் இருசக்கர வாகனத்துடன் காத்திருந்த தனது கல்லூரி நண்பர் பவன்குமாருடன் இருசக்கர வாகனத்தில் (புல்லட்) கிருஷ்ணகிரிக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரியில் இருந்து நேற்று (செப் 23) மாலை திரும்பி வரும் வழியில், வாணியம்பாடி செட்டியப்பனூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பால தடுப்புச் சுவற்றின் மீது மோதி நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளனர். இந்த விபத்தில் பவன்குமார் தலையில் காயம்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திவ்யதர்ஷினி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து வந்த வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் இருவரது உடலையும் கைப்பற்றி உடற்கூராய்விற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தில் இறந்த கல்லூரி மாணவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
இதையும் படிங்க: யானை தாக்கி மாணவி உயிரிழப்பு!