கனரக வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து - ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலி! திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் அருகே உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், சென்னையில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்திற்கு கனரக வாகனம் ஒன்று அதிக பாரத்தை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கூரியர் பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஆம்பூர் நோக்கி வந்த கொண்டிருந்தது.
இந்த நிலையில் எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த கனரக வாகனத்தின் பின்பக்கம் கூரியர் லாரி மோதியுள்ளது. இதில் கூரியர் லாரி ஓட்டுநர் லாரியின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் நகர காவல்துறையினர் ஒரு மணி நேர போரட்டத்திற்கு பிறகு லாரியின் இடிபாடுகளில் இருந்து லாரி ஓட்டுநரை சடலமாக மீட்டனர்.
பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, இறந்த லாரி ஓட்டுனர் குறித்து விசாரணை மேற்கொண்ட போது, அவர் ஆரணி பகுதியைச் சேர்ந்த முனிசாமி என்பது என தெரியவந்துள்ளது. தற்போது ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அதிக பாரத்தை ஏற்றிக்கொண்டு சென்ற கனரக வாகனத்தின் ஓட்டுநர் எந்த ஒரு சிக்னலும் செய்யாமல் திடீரென அந்த லாரியை திருப்பியதும், பின்னால் வந்த லாரி நிலை தடுமாறியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த ஆம்பூர் நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:Madurai Train Fire Update : உத்தரபிரதேசம் - ராமேஸ்வரம் சுற்றுலா ரயில் தீ விபத்து - 9 பேர் பலி!