ஆம்பூர் அரசு மருத்துவமனையில் வழக்கறிஞர்கள் போராட்டம் திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த பாரத் என்ற வழக்கறிஞருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த டிச.22 அன்று ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, வழக்கறிஞர் பாரத்திற்கு ஒரு வாரக் காலமாக மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமலும், பாரத்திற்கு எந்த நோய் இருப்பது குறித்து மருத்துவர்கள் பாரத்தின் உறவினர்களுக்குத் தெரிவிக்காமல் சிகிச்சை அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து நேற்று(டிச.28) பாரத்திற்கு உடல் நிலை சரியாகி விட்டதாகவும், அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் படியும் மருத்துவர்கள் கூறியதாகவும் அதனால் சிகிச்சை முடித்து மீண்டும் நேற்று பாரத்தை அவரது உறவினர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று(டிச.29) காலை மீண்டும் பாரத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவரது உறவினர்கள் மீண்டும் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த பாரத்தின் உறவினர்கள், மற்றும் வழக்கறிஞர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையின் முன்பு பாரத்திற்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவர்கள் யாரும் பேச்சு வார்த்தைக்கு வராததால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவ அலுவலர் அறையின் முன்பு அமர்ந்து 3 மணி நேரமாக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மருத்துவ அலுவலர்கள் பேச்சு வார்த்தைக்கு வராததால், போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் ஆம்பூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் சரவணன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
இச்சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம், பணியில் இருக்கும் மருத்துவர்கள் சரி வரச் சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாகப் பதில் அளிப்பதாகவும், நோய் என்னவென்று கேட்காமலே மாத்திரைகளைக் கொடுத்து அனுப்பி விடுவதாகவும் நோயாளிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதையும் படிங்க:விஜயகாந்த் மறைவையொட்டி தஞ்சாவூரில் கடைகள் அடைக்கப்பட்டு அமைதி ஊர்வலம்..!