அமைச்சரின் மகள், மருமகன் உட்பட 28 பேருக்கு கரோனா - கரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டிருந்த எண்ணிக்கை
திருப்பத்தூர்: வாணியம்பாடியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சரின் மகள், மருமகன் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் கணவர் உட்பட மாவட்டத்தில் 28 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினரும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் மகள், மருமகன், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம் கணவர் உட்பட 15 பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதியானது.
இதனை தொடர்ந்து அமைச்சரின் வீடு, அவரது மகனின் மருத்துவமனை ஆகிய பகுதிகளில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பசுபதி தலைமையில் சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக, 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதே போல் ஆம்பூரில் இன்று (ஜூலை 16) மேலும் 13 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து நோய் பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் நகராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.