திருப்பத்தூர்: குனிச்சி வக்கீல் அய்யர் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்(48). கட்டிடத் தொழிலாளியான இவர் கடந்த மாதம் 4ஆம் தேதி கிருஷ்ணகிரியிலிருந்து திருப்பத்தூருக்குப் பேருந்தில் சென்றுகொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் இவரிடம் இருந்து செல்போன் மற்றும் செல்போன் கவரில் வைத்திருந்த ,ஏடிஎம் கார்டு மற்றும் ரூ.2,500 பணத்தைத் திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து பன்னீர், கந்திலி காவல்நிலையத்தில் பன்னீர் புகார் அளித்து உள்ளார்.
இந்நிலையில் தனது மனைவியின் மருத்துவச் செலவிற்காகச் சேர்த்து வைத்து இருந்த பணத்தை எடுக்க வங்கிக்குச் சென்ற போது அவரது வங்கிக் கணக்கிலிருந்த ரூ.70 ஆயிரத்து 600 முழுவதும் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பன்னீர் தனது வங்கிக் கணக்கின் ஸ்டேட்மென்ட் பார்த்தபோது,கடந்த மாதம் 4ம் தேதி செல்போன் திருடப்பட்ட சிறிது நேரத்தில் யுபிஐ (கூகுள் பே) மூலம் அவரது வங்கிக் கணக்கிலிருந்து பலருக்கு ரூ.70,600 பணம் முழுவதும் பரிவர்த்தனை செய்தது தெரிந்தது.
மேலும் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்ட செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு விசாரித்ததில்,கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம், கரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் செல்போன் திருடிய நபர் தனக்கு பணம் அவசரமாகத் தேவைப்படுகிறது. எனவே என்னிடம் ஏடிஎம் கார்டு இல்லை அதனால் யுபிஐ மூலம் உங்களுக்கு பணத்தை அனுப்புகிறேன் உங்களுக்குத் தேவையான கமிஷன் பிடித்துக் கொண்டு மீதி பணத்தைக் கொடுங்கள் எனக்கூறி பணத்தைப் பெற்று உள்ளார்.