திருப்பத்தூர்:குறுமன்ஸ் பழங்குடியின மக்கள் சங்கமும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும் இணைந்து இன்று (நவ. 23) திருப்பத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு குருமன்ஸ் பழங்குடி இன மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதில் தாங்கள் உண்மையான குறுமன்ஸ் இனத்தவர்கள் எனக்கூறி தலை மீது தேங்காய் உடைத்துக் காண்பித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெற்றோர்களுக்கு சாதிச் சான்றிதழ் இருந்து பிள்ளைகளுக்கு இல்லாமலும், சகோதரர்களில் ஒருவருக்கு இனச் சான்றிதழ் இருந்து மற்றொருவருக்கு இல்லாமலும், இந்த குறுமன்ஸ் பழங்குடி இன மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், குறுமன்ஸ் பழங்குடி இன மக்கள் அனைவருக்கும் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க தலைவரும் அருள் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவுமான டில்லி பாபு தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி, அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், தாங்கள் உண்மையான குறுமன்ஸ் இன பழங்குடி மக்கள் தான் என்பதற்கு சான்றாக சேவையாட்டம் ஆடியும், அருள் கொண்டவர் மீது தேங்காய் உடைத்தும் சாமியை வழிபடும் நிகழ்வை நிகழ்த்திக் காட்டினார்.