திருப்பத்தூர் அதிமுக கூட்டம் திருப்பத்தூர்: திராவிடத்தை தேசிய கட்சிகள் கொச்சைப்படுத்துவதாகவும், தேசிய கீதத்திலும் கூட திராவிடம் இடம்பெற்றுள்ளதாகவும், திராவிடம் என்ற இன உணர்வை காக்க உருவாக்கப்பட்டதே அஇஅதிமுக எனவும், மு.தம்பிதுரை எம்பி தெரிவித்துள்ளார். மேலும், திமுகவை தோற்கடித்து மீண்டும் ஈபிஎஸ்ஸை முதலமைச்சராக்க வேண்டும் எனவும் தொண்டர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் இன்று (நவ.8) நடைப்பெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பி துரை பங்கேற்று பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, '10 ஆண்டுகள் ஆட்சியில் அதிக மிதப்பில் இருந்தோம். தற்போது ஏற்பட்ட தோல்வியால் அதை உணர்ந்து பணியாற்ற வேண்டும். மோடியா லேடியா இல்லை, மோடியா எடப்பாடியா என்பது தான் தற்போது போட்டி.
பாஜகவில் இரண்டு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்படும் என அழைத்தால், பாஜகவுடனும் கூட்டணி அமைப்பவர்கள் தான் திமுகவினர். எடப்பாடியார் ஆதரவோடு தான் மத்தியிலே ஆட்சி அமைக்கும் நிலையை நாம் உருவாக்க வேண்டும். இந்த தேர்தல் அதிமுகவிற்கு பலபரீட்சை என உணர்ந்து பணியாற்ற வேண்டும்' என கட்சி தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
தேசிய கீதத்திலும் 'திராவிடம்' உள்ளது: பின்னர் பேசிய அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, 'தமிழ்நாட்டு மக்கள் தான் 'பிரதமர் யார்?' என்பதை தீர்மானிக்கும் நிலையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை உணர்ந்து பணியாற்ற வேண்டும். திராவிட கட்சிகள், ஏதோ மாயை தோற்றம் என்றும் அப்படி ஒரு வார்த்தையே இல்லை என சில தேசிய கட்சிகள் கொச்சைப்படுத்துகின்றன. தேசிய கீதத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகள் இடம் பெறவில்லை. 'திராவிடம்' என்றுதான் இடம் பெற்றுள்ளது.
திராவிடத்தை காக்கும் அஇஅதிமுக:அதை எழுதியவருக்கு தெரியும். திராவிடம் என்றால், அனைத்தும் சேர்ந்தது என்று அவரிடம் சென்று கேளுங்கள்..; இந்தியாவிற்கே முன்மாதிரியான திட்டங்களை வகுத்துக் கொடுத்தது, திராவிட கட்சிகள் தான். திராவிடத்தைப் பற்றி பேசுவது நமது தன்மானத்தை பற்றி பேசுவதற்கு சமம். திராவிடம் என்ற இன உணர்வை தமிழ்நாடெல்லாம் கொண்டு சென்று இனத்தை காக்க உருவாக்கப்பட்டது தான் அஇஅதிமுக.
தமிழர்களுக்கு தன்மானத்தை உணர்த்தியதே, 'திராவிடம்':திராவிட கட்சிகள் என்ன சாதித்தது? என்று கேட்கிறார்கள். சாதி, மதங்கள் இருக்கக்கூடாது அனைவரும் சகோதரத்துவத்துடன் பழகி தமிழர்கள் தன்மானம் உள்ளவர்கள் என்பதை உருவாக்கி காண்பித்தது, திராவிடம். நம்முடைய தன்மானத்தை காக்க, எடப்பாடி கே.பழனிசாமி நாம் தனித்து போட்டியிட வேண்டும் என்று சூளுரைத்துக் கொண்டிருக்கின்றார்.
தேர்தலில் திமுகவை வென்று ஈபிஎஸ்ஸை மீண்டும் முதலமைச்சராக்குவோம்:2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கசப்பான உணர்வுகளை புரிந்துகொண்டு அதிமுக என்றும் தனித்துதான் போட்டியிடும். பாஜகவுடன் கூட்டணி வைக்கமட்டோம் என தெளிவாக சொல்லியிருக்கிறார். 10 ஆண்டுகள் ஆளுங்கட்சி என்ற மிதப்பில் இருந்தோம். அதனால், தோல்வி ஏற்பட்டது. இந்த தேர்தலில் நமக்கு எதிரி திமுகதான், திமுகவை தோற்கடிக்க வேண்டும் அப்படி தோற்கடித்தால் தான் வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க வேண்டும்' எனப் பேசியுள்ளார்.
கூட்டணிக்கு 'இந்தியா' எனப் பெயரிட்டதாலே இந்தியாவேகாணமால்போனது:மேலும் பேசிய அவர், 'நாடாளுமன்ற தேர்தலில் மண்ணை கவ்வப்போவது திமுகதான். அது உங்கள் கையில் உள்ளது. மேலும், எங்கு பார்த்தாலும் கொள்ளை, வழிப்பறி என சந்தி சிரிக்கின்றது. திமுகவினர் ஆட்சியைப் பார்த்து, 'இந்தியா' (INDIA Alliance) என்ற கூட்டணியை உருவாக்கினார்கள். உடனே, மோடி இந்தியாவின் பெயரை 'பாரத்' என (Modi renamed India as Bharat) பெயர்மாற்றம் செய்தார். இக்கூட்டணியிற்கு இந்தியா என பெயர் வைத்ததால் இந்தியாவே காணமால் போனது; இந்த கூட்டத்திற்கு ஓட்டு போட்டால், நாடும் நாமும் காணமால் போய்விடுவோம்' என பூத் கமிட்டி பொறுப்பாளர்களிடம் பேசினார்.
இதையும் படிங்க:“ஒரு காசு கூட கைப்பற்றவில்லை” - அமைச்சர் எ.வ.வேலு கண்ணீர் மல்க பேட்டி!