திருப்பத்தூர்: தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு, தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு குறித்த பரப்புரைப் பயணக் பொதுக்கூட்டம் நடைபெற்றுவருகிறது. நாகர்கோவிலில் ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்கிய இந்தப் பரப்புரை 25ஆம் தேதி சென்னையில் முடிவடைகிறது.
அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.22) நடைபெற்றது. அப்போது திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பங்கேற்றுச் சிறப்புரையாற்றினர். அப்போது அவர் பேசுகையில், "கரோனா என்கிற தொற்றை விட கொடியது நீட் தேர்வு. கரோனா நோய் வந்தாலும் தடுப்பூசி போட்டு தப்பித்துக்கொள்ளலாம். நானே இரண்டு முறை பாதிக்கப்பட்டு மீண்டு வந்திருக்கிறேன்.
நூறு வருடங்களுக்கு முன்பு நம்முடைய பிள்ளைகள் எல்லாம் மருத்துவர்களாக முடிந்ததா? அப்பொழுதெல்லாம் சமஸ்கிருதம் படித்தால் மட்டுமே மருத்துவராக முடியும். மருத்துவத்திற்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. ஆனால் இப்பொழுது திரும்புகிற திசையெல்லாம் நம்முடைய பிள்ளைகள் மருத்துவர்களாக இருக்கின்றனர். பெரியாரும் நீதிக்கட்சியுமே அதற்கு காரணம். கரோனா எப்படி உருமாறி நம்மை தாக்குகிறதோ அதேபோல் சமஸ்கிருதம் நீட் தேர்வாக இப்பொழுது உருமாறி நம்மை தாக்குகிறது.