திருப்பத்தூர்:முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளருமான கே.சி வீரமணிக்கு சொந்தமான இடங்களில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் தோராயமாக சுமார் 34 லட்சம் ரொக்க பணம், ரோல்ஸ் ராய்ஸ் கார் உட்பட 9 சொகுசு கார்கள், 623 சவரன் தங்க நகைகள், 7.6 கிலோ வெள்ளி பொருட்கள், 1.8 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்கன் டாலர், ஐந்து கணினிகள், ஹார்ட் டிஸ்க்குகள், 275 யூனிட் மணல், வங்கி கணக்கு புத்தகம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினரால் தெரிவிக்கப்பட்டது.
செய்தியாளர்களை சந்தித்த கே சி வீரமணி பொய்யான தகவல்
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி இன்று (செப்.20), திருப்பத்தூரில் ஒரு தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில் பேசிய அவர் கூறியதாவது, “கடந்த 10 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் எனது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது பல பொருட்களை கைப்பற்றியதாக பொய்யான தகவல் அறிக்கையை வெளியிட்டனர்.
ஆனால் எனது வீட்டில் 300 சவரன் மதிப்பிலான தங்க நகை, ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்கன் டாலர், 10 ரூபாய் நோட்டுகள் அடங்கிய ஐந்தாயிரம் ரூபாய், மின்சார கட்டண ரசீது, மூக்கு கண்ணாடி ரசீது, மணல் ரசீது என சொற்ப அளவிலேயே எடுத்துச் சென்றனர்.
அந்த தங்க நகைகள், தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டிருந்ததை விட குறைவாக இருந்ததால், என்னிடமே திருப்பிக் கொடுத்து விட்டனர். வீட்டில் இருக்கும் மணலுக்கு கூட முறையாக இரசீது பெற்றுள்ளேன்.
உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சோதனை நடத்தி உள்ளனர். லஞ்ச ஒழிப்புத் துறையினர் கொடுத்த பத்திரிகை குறிப்பு முற்றிலும் பொய்யானது” என்றார்.
இதையும் படிங்க: 'தீர்ந்தது பெற்றோரின் வேதனை; அரசுப் பள்ளி மாணவர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார் ஸ்டாலின்'