'வீடுகளை இடிக்காதீர்கள்..எங்கள் மீது ஜேசிபியை ஏற்றுங்கள்' -ஆபிஸர்களுடன் வாக்குவாதம் ஏன்? திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பந்தராபள்ளி பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 1976ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், அப்பகுதியில் சுமார் 48 பேருக்கு ஆதிதிராவிட நலத்துறை சார்பாக வீட்டுமனை பட்டாக்களை வழங்கியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் சிலர் மோல்டிங் வீடுகளாகவும், கூரை வீடுகளாகவும் கட்டியுள்ளனர். தொடர்ந்து, கடந்த 2018ஆம் ஆண்டு அதேப் பகுதியைச் சேர்ந்த மற்ற சிலரும் இதேபோல, திரும்பவும் இடம் வேண்டுமென மனு கொடுத்துள்ளனர். இதன் காரணமாக, அதே பகுதியில் இரண்டாவது முறையாக 48 பேருக்கு பட்டாக்கள் அளிக்கப்பட்டன. ஆனால், முதலாவதாக அளிக்கப்பட்ட 48 பேருக்கும், இரண்டாவதாக பட்டாக்கள் அளிக்கப்பட்ட 48 பேருக்கும் சர்வே எண்கள் ஒரே எண்களாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒரு புறம் இருக்க, அந்த இடங்களை இடிக்கப் போவதாக, இன்று (டிச.21) மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட துணை ஆட்சியர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஜெயக்குமார் மற்றும் நாட்றம்பள்ளி தாசில்தார் குமார் உட்பட வருவாய்த்துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு வந்து இடிக்கச் சென்றனர். அப்போது, முதலில் பட்டா வாங்கிய குடும்பங்கள் மட்டுமின்றி பொதுமக்கள் எனப் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ஒரே இடத்திற்கு இரண்டு முறை பட்டா வழங்கியது உங்களுடைய தவறு என்றும்; இது குறித்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது என்றும்; அதன் பின்னர் எங்கள் வீடுகளை இடித்துக் கொள்ளுங்கள் எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அசம்பாவிதத்தை தடுக்கும் வண்ணம் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கும்பகோணம் மாநகராட்சி திமுக - காங். கவுன்சிலர்கள் இடையே மோதல்!