திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள கோயான் கொல்லை, மல்லகுண்டா, தகரகுப்பம், அண்ணா நகர், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி அப்பகுதி ஒன்றிய கழகச் செயலாளர் சாம்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் தொழிலாளர் நலவாரியத்தின் மூலம் கிடைக்கும் பயன்கள் குறித்து அவர் பேசுகையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின், பெண்கள் கல்வியில் முன்னேற்றத்திற்காக தாலிக்குத் தங்கம், கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி உள்ளிட்ட பல திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டுவருவதாகத் தெரிவித்தார்.
"இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மேற்படிப்பு படித்து பதிவுசெய்துள்ள இளைஞர்களுக்கு நிதி உதவிகள் வழங்கிவருவதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தற்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழில் நெறி காட்டும் அலுவலகம் என மாற்றப்பட்டுள்ளது.
படித்து வேலை வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு வாரத்தில் ஒரு முறை (வெள்ளிக்கிழமை) அழைத்து அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வேலை நாடுனர்கள் மற்றும் வேலை அளிப்பவர்கள் நேரில் நேர்காணல் மேற்கொண்டு ஏழு நாள்களுக்கு ஒருமுறை 100 பேர் வரை வேலையில் சேர்ந்து பயனடைகின்றனர்" எனவும் அவர் கூறினார்.
இதுபோன்று வேலூரில் இயங்கிவரும் வேலைவாய்ப்பு அலுவலகம் தற்போது வாணியம்பாடி நகரத்தில் கொண்டுவருவதாகவும் அதில் படித்த இளைஞர்கள் பதிவுசெய்து கிடைக்கும் வேலைவாய்ப்பினைப் பெற்று பயனடைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.