திருப்பத்தூர்:திருப்பத்தூர் அடுத்த ஏ.கே.மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (32). இவர், டைல்ஸ் மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். இவருக்குத் திருமணமாகி யமுனா என்ற மனைவி மற்றும் இரண்டு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் அதே பகுதியில் இவரது வீட்டுக்கு அருகாமையில் வசித்து வரும் வெங்கடேசன் (65) என்பவர் மது பழக்கத்திற்கும் கஞ்சா போதைக்கும் அடிமையானவர் எனவும், இவர் சில சமயங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொள்வார் எனவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக வெங்கடேசனின் மனைவி வீட்டில் தங்குவது இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சிலம்பரசன் வளர்த்து வரும் வாத்துகள் அவ்வப்போது வெங்கடேசன் வீட்டு அருகே சென்று இறை தேடும் பொழுது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.