திருப்பத்தூர்:நாட்றம்பள்ளி அடுத்த ஜங்களாபுரம், வெள்ளாள தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியர் செந்தில்குமார். இவருடைய மகன் பரமேஸ்வரன் (வயது17) பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி 392 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவனுக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதனால் பர்கூரில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்றுள்ளார். இந்த நிலையில் கடந்த மே 7-ஆம் தேதி மாணவன் நீட் தேர்வு எழுதி உள்ளார்.
நீட் தேர்வு எழுதியதில் இருந்தே குறைவான மதிப்பு எண் கிடைத்து விடுமோ? என அச்சப்பட்ட மாணவன் மன அழுத்தத்திலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவன் பரமேஸ்வரன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாடியில் இருந்த அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதன் பின்னர் வீட்டிற்கு வந்த அவருடைய பெற்றோர்கள் நீண்ட நேரமாக மகனை காணவில்லை என தேடி உள்ளனர். பின்னர் மாடியில் உள்ள அறை உள் பக்கமாக பூட்டி இருப்பதை பார்த்து நீண்ட நேரமாக தட்டி உள்ளனர். அப்பொழுது மாணவர் கதவைத் திறக்காத நிலையில், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது பரமேஸ்வரன் அந்த அறையில் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
பின்னர் பரமேஸ்வரனை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாட்றம்பள்ளி போலீசார் மாணவனின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.