தமிழ்நாடு

tamil nadu

முறையில்லாத குடிநீர் விநியோகம்: அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

By

Published : Mar 8, 2020, 12:06 PM IST

திருப்பத்தூர்: ஆறு மாதங்களாக முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முறையில்லாத குடிநீர் விநியோகத்தைக் கண்டித்து போராட்டம்
முறையில்லாத குடிநீர் விநியோகத்தைக் கண்டித்து போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆறு மாதங்களாக இவர்களுக்கு முறையான குடிநீர் விநியோகம் செய்யாமல் இருந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

முறையான குடிநீர் விநியோகம் அளிக்காததைக் கண்டித்தும், ஊராட்சி செயலாளரை மாற்றக் கோரியும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் - புதுப்பேட்டை சாலை வழியாக செல்லும் அரசுப் பேருந்தை சிறைபிடித்து, 50க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை காவல் துறையினர், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

இந்த பேச்சுவார்த்தையில் திருப்தியடையாத பொதுமக்கள், முறையான குடிநீர் விநியோகம் செய்யும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என காவல் துறையிடம் வாக்குவாதத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம், உங்கள் கோரிக்கை மீது இருதினங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனடிப்படையில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கல்குவாரி அருகே பெண் தொழிலாளி சடலமாக மீட்பு - காவல்துறை விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details