பூட்டிய வீட்டில் கொள்ளை: போலீஸ் விசாரணை - கொள்ளை செய்திகள்
திருப்பத்தூர்: பூட்டிய வீட்டை உடைத்து 50 சவரன் தங்க நகைகள், ஒரு லட்ச ரூபாய் ரொக்க பணம் திருடுபோனதை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரில் பிரதான பகுதியாக இருக்கும் ஹவுசிங் போர்டு பேஸ் 1 பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம். இவர் அதே பகுதியில் வாட்டர் கேன் கம்பெனி நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஜீவா. இவர்கள் இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு தங்கள் உறவினர்களின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இதனைப் பயன்படுத்தி கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 50 சவரன் தங்க நகைகள், 1 லட்சம் ரூபாய் பணம், வெள்ளிப் பொருட்கள் உள்ளிட்டவைகளை திருடிச் சென்றுள்ளனர்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் ஜீவாவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே இதுகுறித்து ஜீவா திருப்பத்தூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிக அளவில் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் நடந்த இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.