திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த 2013 ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
தற்போது இப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண் மற்றும் பெண் இருபாலர் என மொத்தம் 1300 மாணவர்கள் பயின்று மாவடத்திலேயே அதிக மாணவர்கள் பயிலும் அரசு பள்ளியாக உள்ளது. இப்பள்ளியில் ஆம்பூர் நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார 10க்கும் மேற்பட்ட கிராம பகுதியிலிருந்து மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தனி கட்டிடம் அமைத்து மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில், ஏற்கனவே உயர்நிலைப்பள்ளியாக செயல்பட்டு வந்த பள்ளி கட்டிடம் கடந்த 6 மாத காலத்திற்கு முன்பு இடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு மாற்று கட்டிடம் தற்போது வரை கட்டப்படாத நிலையில், 6 ஆம் வகுப்பு மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்கள் காலை முதல் பிற்பகல் வரை அரசு துவக்கப்பள்ளியில் உள்ள வகுப்பறையில் கல்வி பயின்று பிற்பகலுக்கு மேல் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், 8 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் பிற்பகல் முதல் மாலை கூடுதல் பள்ளி கட்டிடத்தில் உள்ள வகுப்பறையில் மற்ற வகுப்பு மாணவர்களுடன் போதிய இட வசதியில்லாமல் நெருக்கடியுடன் கல்வி பயின்று வரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படிகிறது.