திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெத்தலகேம் பகுதியில் ஆம்பூர் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆம்பூர் ரெட்டித்தோப்பு, மாங்காதோப்பு, கம்பிக்கொல்லை, பெத்தலேகம் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் திறனை வளர்க்க ‘உலகளாவிய வகுப்பறை பரிமாற்றம்’ என்ற நோக்கத்தில், இதே பள்ளியில் பணியாற்றும் சரவணன் என்ற ஆங்கில ஆசிரியர் ஒரு முன்னெடுப்பை எடுத்துள்ளார்.
இவர் சமூக வலைதளமான ஸ்கைப் மற்றும் கஹூட் என்ற மென்பொருள் மூலம் லெசாதோ, ரஷ்யா, மலேசியா, அரபிக் நாடுகள் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள பள்ளி மாணவர்களுடன் ஆம்பூர் நகராட்சி பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் 20 க்கும் மேற்பட்ட மாணவர்களை வினாடி - வினா போட்டியில் பங்கேற்க வைக்கிறார்.
பல்வேறு நாட்டு மாணவர்களுடன் உரையாடும் நகராட்சி பள்ளி மாணவர்கள் - ஆங்கில ஆசிரியரின் முன்னெடுப்பு! பல்வேறு நாட்டு மாணவர்களுடன் நகராட்சி பள்ளி மாணவர்கள் மொழி, கற்றல் வழி, உரையாடல் உள்ளிட்டவை மூடும் தொடர்பு கொள்கின்றனர். இன்றைய நவீன யுக்திகளை ஆங்கிலத்தில் உரையாடி, அவர்களது கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் ஆகியவற்றை பரிமாறிக் கொள்கின்றனர். இதனால் மாணவர்களின் அறிவு, கற்றல் திறமை, மற்றும் ஆங்கில மொழிப்புலமை ஆகியவை மேல்நாட்டு தரத்தில் வளரும் என ஆசிரியர் சரவணன் கூறுகிறார்.
இதுகுறித்து இப்பள்ளியில் பயிலும் 8 ஆம் வகுப்பு மாணவி சஞ்சனா கூறுகையில், “சிறிய முயற்சியில் உலக தரத்தில் பல்வேறு நாடுகளில் உள்ள மாணவர்களுடன் கலைந்துரையாடி, அவர்களுடன் கல்வியில் போட்டி போட்டு உலக நாடுகளின் கலாச்சாரம், பண்பாட்டை தெரிந்து கொள்ள எங்களை தயார்படுத்துவதால், எங்களின் அறிவு மற்றும் ஆங்கிலப்புலமை வெகுவாக உயர்கிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:சிறார் திரைப்பட விழா - கும்பகோணத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைப்பு