திருப்பத்தூர்:வாணியம்பாடி செட்டியப்பனூர் கூட்டுச்சாலை பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பெங்களூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து, எதிர்சாலையில் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநரான உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த ஏழுமலை, தனியார் பேருந்து ஓட்டுநரான கோலார் பகுதியைச் சேர்ந்த முகமது நதீம், தனியார் பேருந்தின் கிளீனரான வாணியம்பாடியைச் சேர்ந்த முகமது பைரோஸ், சித்தூர் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார், சென்னையை அடையாறு பகுதியைச் சேர்ந்த ராஜு மற்றும் சென்னையைச் சேர்ந்த கிருத்திகா என்ற பெண் ஆகிய 6 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த நபர்களை உடனடியாக மீட்ட அக்கம்பக்கத்தினர், சிகிச்சைக்காக அவர்களை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் 5 நபர்கள் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக மருத்துவர்கள் அனுப்பி வைத்ததாகக் கூறப்பட்டது. தற்போது 27 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இந்த விபத்து குறித்து சம்பவம் இடத்திற்கு வந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்தில் சிக்கிய பேருந்துகளை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.