திருப்பத்தூர்: ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மனைவி சசிகலா (42). இவர் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி அருகே மளிகைக் கடை நடத்திவருகிறார். வழக்கம்போல வியாபாரம் செய்துவிட்டு இரவு 9 மணி அளவில் கடையை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், டிசம்பர் 10ஆம் தேதி வழக்கம்போல் கடை திறந்து வியாபாரம் செய்துவிட்டு இரவு கடையை மூடிக்கொண்டு பாச்சல் மேம்பாலம் வழியாக சசிகலா தனது மகள் மோனிகா உடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது, மேம்பாலம் ஒன்றின் அருகே செல்லும்பொழுது, எதிரே பதிவெண் இல்லாத பைக்கில் வந்த இருவர் மோனிகாவின் இருசக்கர வாகனத்தில் மீது மோதி விபத்து ஏற்படுத்தினர். பின்னர் சசிகலா, மோனிகா இருவரும் கீழே விழுந்ததில் சசிகலாவுக்குத் தலையில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சசிகலா கழுத்தில் அணிந்திருந்த ஆறு சவரன் தங்கத் தாலிச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அவ்விடத்திலிருந்து மறைந்தனர். அப்போது, சசிகலாவும் மோனிகாவும் கத்தி கூச்சலிட்டனர். அக்கம்பக்கத்தில் இருந்த நபர்கள் வருவதற்கு முன் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தப்பிச் சென்றனர்.