தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனது புகார் மனுவை பசுவிடம் கொடுத்த பெண்

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே தனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை பெண் ஒருவர் பசுவிடம் கொடுத்தார். இதையடுத்து மனுவை காவல் துறையினர் பெற்றுக்கொண்டனர்.

காவல் நிலையம் முன்புள்ள பசுவிடம் புகார் மனுவைக் கொடுத்த பெண்
காவல் நிலையம் முன்புள்ள பசுவிடம் புகார் மனுவைக் கொடுத்த பெண்

By

Published : Jun 22, 2021, 6:10 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் வசித்துவருபவர் தொழிலதிபர் ராஜாமணி. இவரது மகள் நந்தினி, சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்துவருகிறார். நந்தினி பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது ராஜாமணி உறவினரான தொழிலதிபர் ஸ்ரீதர் அவரது மகன் சரவணன் என்பவருக்காக ராஜாமணி மகளான நந்தினியை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதற்கு நந்தினி மறுத்ததால் 2020 ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று ராஜாமணி வசித்துவந்த அம்புர்பேட்டை பகுதியில் உள்ள வீட்டில் ஸ்ரீதர், அவரது மகன் சரவணன், தேமுதிக நகரச் செயலாளர் சங்கர் ஆகியோர் அத்துமீறி நுழைந்து ராஜாமணி, அவரது குடும்பத்தினரை கொலை மிரட்டல்விடுத்தும், வீட்டிலிருந்த பொருள்களைச் சேதப்படுத்தியுள்ளனர்.

கொலை மிரட்டல்

கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக அவர்கள், நந்தினி குடும்பத்தினர்களுக்கு தொலைபேசி, அவரது வீட்டிற்கு நேரில் சென்று மிரட்டிவருகின்றனர். இது குறித்து ராஜாமணி, நந்தினி தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்றிரவு (ஜூன் 20) சரவணன் தொலைபேசி மூலமாக நள்ளிரவு ராஜாமணியைத் தொடர்புகொண்டு, ‘நந்தினியை திருமணம் செய்துவைக்கவும், இல்லையென்றால் அனைவரையும் கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நந்தினி தனது பெற்றோருடன் நகர காவல் நிலையத்திற்குப் புகார் கொடுக்கச் சென்றார்.

அப்போது காவல் நிலையத்தில் அலுவலர்கள் இல்லாததாலும், பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததாலும் காவல் நிலையம் முன்பாக நின்றுகொண்டிருந்த பசுவிடம் புகார் மனுவைக் கொடுத்தார்.

இதனையறிந்த காவல் துறையினர் விரைந்துவந்து நந்தினி, அவரது பெற்றோரை காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்று புகார் மனுவைப் பெற்றுக்கொண்டனர். மேலும் உரிய விசாரணை மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details