திருப்பத்தூர்: ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலம் ஊராட்சி, மாக்கனூர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மகள் இந்துமதி (25). இவருக்கு சிவகிரி என்பவருடன் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சிவகிரி கடந்த 2019 ஆம் ஆண்டு உடல்நிலை பாதிப்பால் இறந்துவிட்டார்.
இந்நிலையில், இந்துமதி ஆம்பூர் பகுதியில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது திருப்பத்தூர் அடுத்த கந்திலி அருகே உள்ள கஜல்நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சென்ராயன் என்பவரின் மனைவி பப்பி (30) என்பவருடன் அறிமுகமாகி இருவரும் தோழிகளாக இருந்து வந்துள்ளனர்.
மேலும், ஜோலார்பேட்டை அருகே உள்ள சின்ன மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த சக்தி குமார் என்பவரின் மகன் ஜீவா (23) என்பவருக்கும், இந்துமதிக்கும் தகாத உறவு ஏற்பட்டு இருவரும் திருமணம் ஆகாமலேயே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்து உள்ளனர்.
இதனால் கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி இந்துமதிக்கும், ஜீவாவுக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை ஜீவாவின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் இந்துமதியின் தோழியான பப்பி (30), இவரது உறவினர் மணிகண்டன்(34) ஆகியோர், நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் (47) என்பவருக்கு தகாத உறவில் பிறந்த மூன்று மாத பெண் குழந்தையை ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், குழந்தையைப் பெற்ற பிறகு ஜீவா என்பவர் இந்துமதியிடம் வாழ மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த இந்துமதி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
இந்த விசாரணையில், தகாத உறவில் பிறந்த பெண் குழந்தையை விற்று கள்ளக்காதலியுடன் வாழ மறுப்பு தெரிவித்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் குழந்தையை விற்ற ஜீவா என்பவர் உட்பட விற்பனைக்கு உடந்தையாக இருந்த பப்பி, மணிகண்டன் மற்றும் அரசு முறைப்படி குழந்தையை வாங்காமல் முறைகேடாக குழந்தையை வாங்கிய கலைச்செல்வன் ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:வெள்ளத்துல கார் முழுவதுமா சேதமாயிடுச்சா?... முழு இன்சூரன்ஸ் தொகையும் பெறுவது எப்படி?