திருப்பத்தூர்:வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஜமான்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் முரளி (22). இவர் சென்னையில் உள்ள பேக்கரி கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இதனிடையே, கடந்த சில ஆண்டுகளாக தும்பேரி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும், முரளியும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சிறுமியின் அண்ணன் சந்தோஷ், முரளியிடம் தனது தங்கையுடன் பேசுவதை நிறுத்தும்படி பலமுறை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டுகொள்ளாமல் முரளியும், சிறுமியும் தொடர்ந்து பேசி வந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 15ஆம் தேதி இரவு முரளியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். பின்னர், சடலமாக கிடந்த முரளியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பலூர் காவல் துறையினர், முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இக்கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை, முரளியை கொலை செய்த நபர்களை தேடி வந்த நிலையில், சிறுமியின் அண்ணன் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்களான தும்பேரி பகுதியைச் சேர்ந்த சூர்யா (24) மற்றும் அஜீத் (24) ஆகிய 3 நபர்களை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
பின், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், முரளியில் கொலை சம்பவத்தில் சந்தோஷிற்கு மேலும் நான்கு பேர் உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான குழு தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.