கரோனா ஊரடங்கில் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த தளர்வை அடுத்து 34 வகையான சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாடு முழுவதும் இயங்கத் தொடங்கின. இதன் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நான்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர, மற்ற பகுதிகளில் வழக்கம்போல் கடைகள் இயங்கத் தொடங்கின.
வாணியம்பாடியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் காய்கறி, பழங்கள் விற்பனை செய்து வந்ததாகக் கூறி தள்ளு வண்டிகளை பறிமுதல் செய்து, அவற்றில் இருந்த பழங்களை சாலையில் வீசியும், தள்ளு வண்டி கடைகளை கீழே தள்ளியும் அடாவடியில் ஈடுபட்டார்.
அந்த காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து நகராட்சி ஆணையர் சிசில் தாமஸின் இந்த அடாவடித்தனமான செயலுக்கு திமுக மகளிர் அணித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, நகராட்சி ஆணையர் சிசில் தாமஸை காத்திருப்போர் பட்டியலில் வைக்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, வாணியம்பாடியில் உள்ள 18 தொழில் சங்கங்களின் பேரமைப்பினர் சார்பில் சிசில் தாமஸை மீண்டும் வாணியம்பாடி நகராட்சி ஆணையராக பணி அமர்த்த வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருளிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.